ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமுக்கும் ரஷ்யா தடை..!!!
அமெரிக்க தலைமையிலான மேற்குலகுடன் மட்டுமின்றி அவற்றை மையமாக கொண்ட தொழில்நுட்ப உலகின் பெரு நிறுவனங்கள் உடனும் ரஷ்யாவின் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஷ்யர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிடலாம் என்ற இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தின் அறிவிப்பு ரஷ்ய அரசை ஆத்திரமூட்டி உள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் இன்ஸ்ட்டாகிராமுக்கு தடை விதித்துள்ள அந்நாட்டின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், அதன் செயல்பாட்டை 48 மணி நேரத்தில் முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
பேஸ்புக்கையும் ஏற்கனவே தடை செய்துவிட்ட ரஷ்யா, பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா குழுமத்திற்கு எதிராக குற்ற நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் ரஷ்ய அரசு செய்தி ஊடகங்களின் ஒளிபரப்புகளை யூடியூப் நிறுவனம் உலக அளவில் தடை செய்துள்ளது. இதனால் ரஷ்யாவின் அரசு செய்தி ஊடகங்கள் இனி யூடியூப் பக்கங்களில் இடம் பெறாது. இது ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்களுக்கு பெறும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.