நேட்டோ அமைப்பில் உறுப்பினராக வலியுறுத்த மாட்டேன் என உக்ரைன் அதிபர் திடீர் அறிவிப்பு!!

ரஷியாவுக்கு எதிரான போரில் திடீர் திருப்பமாக நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராக தொடர்ந்து வலியுறுத்தப் போவதில்லை என்றும் அதற்கான விருப்பத்தை கைவிட்டுவிட்டதாகவும் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். அமெரிக்க தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் இதனை கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் உள்ள கிழக்கு உக்ரைனில் உள்ள 2 பகுதிகளை தனி குடியரசுகளாக உக்ரைன் அறிவிக்க வேண்டும், கிரீமியா தீப கற்பத்தை ரஷிய பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் குறித்து சமரச பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

நேட்டோவில் இணையப்போவதில்லை என்று வாக்குறுதி அளிப்பது உள்ள நிபந்தனைகளை உக்ரைன் நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான படையெடுப்பு உடனடியாக நிறுத்தப்படும் என்று ரஷிய அரசு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நேட்டோ அமைப்பில் இணையும் விருப்பத்தை கைவிட்டுவிட்டதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.உக்ரைனை சேர்ந்து கொள்ள நேட்டோ தயாராக இல்லை என்று நன்கு தெரிந்த பிறகு அந்த அமைப்பில் இணையும் விருப்பத்தை கைவிட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 14வது நாளாக உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை நடத்தி வரும் ரஷிய படைகள், கீவ், கார்க்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் மீது குண்டுமழை பொழிகிறது. மனிதாபிமான அடிப்படையில் ரஷிய போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் இந்த நகரங்களில் வசித்த 20 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளான போலாந்து,ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.இதனிடையே ரஷியாவின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றான நேட்டோ அமைப்பில் இணைவதை கைவிடுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்து இருப்பதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.