வரும் 27ம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க அனுமதி: ஒன்றிய அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் 27ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து சேவையை ஒன்றிய அரசு நிறுத்தியது. இதன் பின், 2020, ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கும் 37 நாடுகளுக்கும் இடையே ஏர் பபிள் திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி முதல் மீண்டும் வழக்கமான சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என 2021, நவம்பர் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஒமிக்ரான் வகை புதிய தொற்று பரவல் காரணமாக இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என பிரதமர் மோடி அடுத்த நாளே அறிவித்தார். இதனால், சர்வதேச விமான சேவை தொடங்குவதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று 4 ஆயிரத்துக்கும் குறைவான சரிந்துள்ள நிலையில், வரும் 27ம் தேதி முதல் வழக்கமான சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.