சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு: போலீசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். அவர் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மேல்முறையீடு செய்தார். இது நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாவுக்கு பக்கவாத நோய் உள்ளது. அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. இதைத்தவிர அவருக்கு உடல் நீதியாக பல்வேறு பிரச்னைகள் உள்ளதால்,  உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்,’ என தெரிவித்தார். ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘வழக்கில் உடனடியாக ஜாமீன் வழங்க முடியாது. இந்த மனு தொடர்பாக தமிழக போலீசார் 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மகாலட்சுமி.