ரஷ்ய அதிபர் புடின் பகிரங்க எச்சரிக்கை உக்ரைன் என்ற நாடே இருக்காது!

‘உக்ரைனில் நடக்கும் அனைத்திற்கும் அதன் ஆட்சியாளர்களே காரணம். இதனால், உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழும்,’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைனில் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால், இந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று விமானப்பணிப் பெண்களுடனான நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: உக்ரைனில் நடக்கும் அனைத்து அவலத்திற்கும் அந்நாட்டின் தலைமைதான் காரணம். இதை அந்நாட்டின் நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்வதை இனியும் தொடர்ந்தால், உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழக்கூடும். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டால், அதற்கு அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும்.

உக்ரைன் அரசு ஆபத்தில் இருக்கிறது. தற்காலிக போர் நிறுத்த முயற்சியை நாசம் செய்து விட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்கின்றன. திணிக்கப்படும் இந்த தடைகள், ஒருவகையில் போர் அறிவிப்பதற்கு சமமானவை. ஆனால், கடவுளுக்கு நன்றி, நாங்கள் இன்னும் அந்த அளவிற்கு செல்லவில்லை. இவ்வாறு புடின் கூறி உள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், ரஷ்ய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான ஏரோபிளோட், நாளை முதல் பெலாரஸ் தவிர அனைத்து சர்வதேச விமானங்களையும் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

* இன்று 3ம் கட்ட பேச்சு
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்கனவே 2 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பெலாரஸ் நாட்டு எல்லையில் இப்பேச்சுவார்த்தை நடக்கிறது. போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

* விமானம் பறப்பதை தடுத்தால் உலகமே பேரழிவை சந்திக்கும்
உக்ரைனை சுற்றி போர் விமானங்கள் பறப்பதற்கு  தடை விதிக்கும்படி நேட்டோ நாடுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார். இந்த தடையை விதித்தால், ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் மீது பறந்து தாக்குதல் நடத்த முடியாது. ஆனால், இந்த தடையை விதித்தால் ரஷ்யாவுடன் நேரடி மோதல் ஏற்படும் என்பதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளை நிராகரித்து வருகின்றன. இந்நிலையில், புடின் நேற்று முன்தினம் விடுத்த எச்சரிக்கையில், ‘விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டால், அதை அறிவிக்கும் நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக போரில் ஈடுபடுவதாகவே கருதப்படும். இது, ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகத்துக்குமே பெரும் பேரழிவாக அமையும்,’ என்று மிரட்டியுள்ளார்.

* அதே மோசமான தந்திரம்
செசன்யா, சிரியா நாடுகளின் மீது போர் தொடுத்த போது ரஷ்யா எதிர்பாராத எதிர்ப்பை சந்தித்த போது, அந்த நாடுகளை சர்வ நாசமாக்கியது. அதே தந்திரத்தை உக்ரைனிலும் ரஷ்ய ராணுவம் இப்போது பின்பற்றி வருவதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘உக்ரைன் ராணுவத்தின் எதிர்ப்பும்,  வலிமையும் ரஷ்ய படைகளுக்கு திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1999ல் வெடித்த செசன்யா போரிலும், 2016ல் நடந்த சிரியா போரிலும் ரஷ்ய படைகளுக்கு கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய படைகள், இரு நாடுளையும் நாசமாக்கின. அதேபோல், உக்ரைன் படைகளின் மன உறுதியை சீர்குலைக்கும் வகையில், குடியிருப்புகளை ரஷ்யா படைகள் நாசமாக்கி வருகிறன்றன,’ என கூறப்பட்டுள்ளது.

* மனிதாபிமானமிக்க நர்சை சுட்டுக் கொன்றது ரஷ்யா
உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதியில், போரில் காயமடைந்த மக்களையும், ராணுவ வீரர்களையும் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பணியில் ஈடுபட்ட மனிதாபமானமிக்க பெண் மருத்துவப் பணியாளர் வெலன்டினா புஷித், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டார். டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த 2016ம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய கிழக்கு உக்ரைனில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ராணுவ மருத்துவ பணியாளராக பணியில் சேர்ந்தார். தற்போது உக்கிரமான போரில், கடுமையான துப்பாக்கி சூடு நடக்கும் பகுதிகளுக்கும் துணிச்சலாக சென்று காயமடைந்த பலரின் உயிரை வெலன்டினா காப்பாற்றி வந்தார். இந்நிலையில் அவரே துப்பாக்கி குண்டுக்கு இரையானார். அவரது சடலத்தை கட்டிப்பிடித்து பெண்கள் பலர் கதறி அழுதனர். வெலன்டினா இறந்து கிடந்த சுவர் அருகில் மலர்களை வைத்து மக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.