3 முறை கொல்ல முயற்சி உக்ரைன் அதிபர் தப்பி ஓட்டம்?

உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக நேற்றும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் கிளஸ்டர் வகை குண்டுகளை ஏவி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போரில் ரஷ்யாவின் முக்கிய குறியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருதப்படுகிறார். இதனால், ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய அதிபர் புடினின் நேரடி பார்வையின் கீழ் 3 கூலிப்படை அனுப்பப்பட்டு உள்ளதாக சர்வதேச உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூலிப்படையின் ஒரே குறி, ரஷ்ய ராணுவத்துடன் உள்ளே நுழைந்து அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்வது மட்டுமே. கடந்த ஒரு வாரத்தில் இப்படையின் 3 தாக்குதல் முயற்சியில் இருந்து ஜெலன்ஸ்கி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

பயங்கர போர் நடந்த சூழலிலும், தலைநகர் கீவ்வில் தனது பாதுகாவலர்களுடன் தங்கி இருந்த அதிபர் ஜெலன்ஸ்கி தற்போது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவர் போலந்து நாட்டிற்கு தப்பி ஓடியிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பாக இதே போல் உக்ரைன் ராணுவத்தை சரணடையச் சொன்னதாக ஜெலன்ஸ்கி கூறியது போல் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர், கீவ் நகரின் தெருக்களில் நின்றபடி ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.