மணிப்பூர் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
இம்பால்: மணிப்பூரில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் 22 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. கடந்த 28ம் தேதி முதற்கட்ட தேர்தல் அரங்கேறிய நிலையில், எஞ்சிய 22 தொகுதிகளில் 2வது மற்றும் கடைசிகட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், நாகா மக்கள் முன்னணி, சிவசேனா, என்.சி.பி., சி.பி.ஐ. ஆகிய கட்சிகளுடன் சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். களத்தில் இரண்டு பெண்கள் உள்பட 92 வேட்பாளர்கள் உள்ளனர்.
தௌபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் ஓ இபோபி சிங், காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக அவர் தனது இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். தௌபால், சந்தில், உக்ருல், சேனாபதி, தமிங்லாங் மற்றும் ஜெரிபாக் ஆகிய 6 மாவட்டங்களில் 2ம் கட்டமாக தேர்தல் நடக்கின்றது. இதற்காக 1,247 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணி வரை 11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் மொத்தம் 8 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றவுள்ளனர். மணிப்பூர் தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட உள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.