ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியது
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.
அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.
அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.
ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 9 வது நாளை எட்டியுள்ளது, பலர் எதிர்பார்க்காத வகையில் உக்ரேனியப் படைகள் ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் மோதல் உடனடியாக முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றி உள்ளது. ஜபோரிஜியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலைய தளத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
உக்ரைனில் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், ராணுவ ஹெலிகாப்டர்கள் ரஷிய படைகளுக்கு துணையாக போகும் காட்சிகளை ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.