உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலி பங்குச்சந்தை வீழ்ச்சியால் நஷ்டம் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை!!!!

 உக்ரைன் போர் எதிரொலியாக பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, பழைய குயவர்பாளையம் பச்சரிசிக்கார தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (46). மனைவி லாவண்யா (34). 15 வயதில் மகள், 13 வயதில் மகன் உள்ளனர். நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருந்து வந்தார். தம்பதி பல லட்சம் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் எதிரொலியாக, பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால் நாகராஜன், லாவண்யா தம்பதி மனமுடைந்த நிலையில் இருந்தனர். மேலும், பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காக, பலரிடம் லட்சக்கணக்கில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் மனக்குழப்பத்தில் இருந்து வந்தனர்.

நேற்று முன்தினம் காலையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். தம்பதி மட்டுமே வீட்டில் இருந்தனர். பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை மாலையில் நாகராஜன் அழைக்க வராததால் அங்கு சென்ற உறவினரான ஸ்ரீதேவி தன் வீட்டுக்கு கூட்டிச் சென்றுள்ளார். இரவில் அவர் போன் செய்தபோதும் எடுக்காததால் சந்தேகம் அடைந்து குழந்தைகளுடன்  அங்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால்  ஜன்னல் வழியாக பார்த்தபோது, நாகராஜன், லாவண்யா தம்பதி தூக்கில் பிணமாக தொங்கியது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

 தகவலறிந்து தெப்பகுளம் போலீசார் வந்து தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘‘பங்குச்சந்தையில் நஷ்டத்தை சந்தித்ததால் இந்த விபரீத முடிவுக்கு வந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாகராஜனின் லேப்டாப், செல்போன், பென் டிரைவ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றனர். பங்குச்சந்தை நஷ்டத்தால் தம்பதி தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதறி அழுத குழந்தைகள்; தம்பதியின் கண்கள் தானம்
மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப்பின் நாகராஜன் – லாவண்யா தம்பதியின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது, குழந்தைகள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு முன்பாக மருத்துவமனையில் திரண்டிருந்த உறவினர்கள், தம்பதியின் கண்களை தானம் செய்வதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து டாக்டர்கள் உரிய பரிசோதனை செய்து, கண்களை தானமாக எடுத்துக்கொண்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.