உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிமுகம் செய்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி 2021ல் நடைபெற உள்ளது. இதில் 9 அணிகளிடையே பலப்பரீட்சை நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு தொடரிலும் 120 புள்ளிகள் பெறும் வகையில் அட்டவணை அறிவிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.  புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சில போட்டிகளை ரத்து செய்ய வேண்டி வந்ததால் ஒவ்வொரு அணியும் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கை, அவற்றில் பெறும் வெற்றி விகிதம் கணக்கில் கொள்ளப்படும் என்று கடந்த மாதம் ஐசிசி விதிகளை மாற்றியது. இதனால் முதலிடத்தில் இருந்த இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆஸ்திரேலியா – இந்தியா, நியூசிலாந்து – பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா – இலங்கை அணிகளிடையே டெஸ் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில், சதவீத புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலியா (76.6), இந்தியா (72.2), நியூசிலாந்து (66.7), இங்கிலாந்து (60.8) அணிகள் முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. எஞ்சியுள்ள தொடர்களில் அதிக வெற்றிகளைக் குவித்து பைனலுக்கு முன்னேற இந்த அணிகள் வரிந்துகட்டுவதால் முதல் 2 இடத்தைப் பிடிப்பது யார் என்பதில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. ஆஸி.க்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 30 புள்ளிகளை பெற்றது. ஒட்டுமொத்தமாக 390 புள்ளிகளுடன் இந்தியா முன்னிலை வகித்தாலும், சதவீத புள்ளிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் 2வது இடத்தில் நீடிக்கிறது.