சளியை விரட்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு கஷாயம்…

மிளகில் விட்டமின் சி, ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை சலதோஷம், இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற அறிகுறிகளுக்கு எதிராக செயல்படுகிறது. அப்படிப்பட்ட மிளகை கொண்டு எப்படி எளிதாக 20 நிமிடங்களில் கஷாயம் செய்யலாம் என அறிவோம். கருப்பு மிளகில் ஏராளமான விட்டமின்கள், தயமின், ரிபோப்ளவின், விட்டமின் சி, ஈ, பி6 மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. அதே மாதிரி ஜிங்க், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதனாலேயே இந்த மிளகை நிறைய மருத்துவ நன்மைகளுக்கு பயன்படுத்துகின்றனர். மிளகில் உள்ள விட்டமின் சி நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மிளகு கஷாயம் தயாரிக்க கருப்பு மிளகு, துளசி, பனை வெல்லம், சர்க்கரை மற்றும் தண்ணீர் போன்ற பொருட்கள் தேவைப்படுகிறது. இந்த மிளகு கஷாயத்தை வெறும் 20 நிமிடங்களில் செய்து உங்க சளித்தொல்லையை நீக்கி விட முடியும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கருப்பு மிளகை போட்டு வெடிக்கும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை உரலில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். உடைத்த மிளகு அதனுடன் துளசி, பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்துங்கள். பிறகு ஒரு வடிகட்டியைக் கொண்டு கஷாயத்தை வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சீரணமின்மை, இருமல் மற்றும் சலதோஷம் அறிகுறிகள் குறையும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.