பஞ்சாப் கிங்சுக்கு மயாங்க் கேப்டன்!!

ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசனில் களமிறங்க உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் (31 வயது, பெங்களூரு) நியமிக்கப்பட்டுள்ளார். மெகா ஏலத்துக்கு முன்பாக மயாங்க் மற்றும் அர்ஷ்தீப் சிங் என 2 வீரர்களை மட்டுமே பஞ்சாப் அணி தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது. தலைமை பொறுப்பேற்பது குறித்து மயாங்க் கூறுகையில், ‘2018 சீசனில் இருந்து பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறேன். அந்த அணியில் இடம் பெற்றிருப்பதற்காக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். தற்போது கேப்டனாகவும் பொறுப்பேற்க உள்ளது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. சக வீரர்களின் ஒத்துழைப்புடன் தலைமை பொறுப்பில் மிக எளிதாகவும் சிறப்பாகவும் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். 2014 சீசனில் மட்டும் இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ள பஞ்சாப் அணி, கடந்த 3 சீசனாக 6வது இடம் மட்டுமே பிடித்து வந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.