ஸ்ரீகாளஹஸ்தி சிவன் சீர்வரிசை பொருட்கள்-அமைச்சர் தலையில் சுமந்து வந்து வழங்கினார்!

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 2வது முறையாக சீர்வரிசை பொருட்களை அமைச்சர் நேற்று தலையில் சுமந்து வந்து வழங்கினார்.
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரமோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெவரும் வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான நேற்று மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி 2வது முறையாக அரசு சார்பில்  சீர்வரிசைப் பொருட்கள் கொண்டு வந்து சுவாமிக்கு சமர்ப்பித்தார்.

அப்போது, பட்டு வஸ்திரங்கள் கொண்ட சீர்வரிசை பொருட்களை சமர்ப்பிக்கும் வாய்ப்பு தனக்கு வந்தது அதிர்ஷ்டம், அதனை சிவன் கொடுத்த வரமாக கருதுவதாகவும், மாநிலத்தில் உள்ள அனைவரும் எல்லா நலனும் பெற்று சந்தோஷத்துடன் வாழவேண்டும் என கடவுளிடம்  வேண்டிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் பெத்திரெட்டி. ராமச்சந்திர ரெட்டியை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அங்கிருந்து  மங்கள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை பொருட்களை தலைமீது சுமந்து கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் கோயிலின் வேத பண்டிதர்களிடம் வழங்கினர்.
தொடர்ந்து பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி குடும்பத்தினருக்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்ய கோயில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்தனர்.

தொடர்ந்து குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் அவருக்கு வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் செய்து வைத்து சுவாமி மற்றும் அம்மன் படம், தீர்த்த பிரசாதத்தை வழங்கினர்.
தொடர்ந்து கோயில் வெளியில் வந்தவர்  சிவன் கோயில் அருகிலுள்ள சொர்ணமுகி ஆற்றின் அருகில் ஏற்பாடு செய்திருந்த கைலாய மலைபோன்ற செட்டிங்கை தொடங்கி வைத்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.