உலக டென்னிஸ் தரவரிசை பட்டியல்; ரஷியாவின் டேனில் மெட்வடேவ் முதல் இடம் பிடித்து சாதனை

டென்னிஸ் வீரர்களுக்கான உலக தரவரிசையை வழங்கும் ஏ.டி.பி. தரவரிசை பட்டியலில் சாதனை பதிவாக மொத்தம் 361 வாரங்கள் வரை நீடித்து வந்தவர் நோவக் ஜோகோவிக்.  செர்பியா நாட்டை சேர்ந்த அவர் 8,465 புள்ளிகள் பெற்று உள்ளார்.  இந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளி விட்டு ரஷியாவின் டேனில் மெட்விடேவ் (வயது 26) 8,615 புள்ளிகளுடன் ஏ.டி.பி. தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளார்.

2020-ம் ஆண்டு உலக டூர் இறுதி சுற்று போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மெட்விடேவ், கடந்த ஆண்டு (2021) அமெரிக்க ஓபன் பட்டம் பெற்றார். அத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.  அவர் நம்பர் ஒன் இடம் பிடித்த 3-வது ரஷிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு ரஷிய வீரர்களில் கபெல் நிகோவ் (1999-ம் ஆண்டு), மரட் சபின் (2000) ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (7,515 புள்ளிகள்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். மெக்சிகோ ஓபன் போட்டியில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபெல் நடால் (6,515 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தையும், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (6,445 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் (5,000 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், இத்தாலி வீரர் பெரேட்டினி (4,928 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 7-வது இடத்தையும் பிடித்தனர். நார்வேயின் கேஸ்பர் ரூட் (3,915 புள்ளிகள்) 8-வது இடத்திலும், கனடாவின் அலியாசிம் (3,883 புள்ளிகள்) 9-வது இடத்திலும் தொடருகின்றனர். போலந்தின் ஹூபர்ட் ஹூர்காஸ் (3,496 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 10-வது இடத்தை பெற்றுள்ளார்.
முதல் இடம் பிடித்ததுபற்றி மெட்விடேவ் அளித்துள்ள பேட்டியில், முதல் இடம் அடைந்ததற்காக நிச்சயம் நான் மகிழ்கிறேன்.  இளம் வயதில் இருந்தே முதல் இடம் அடைய வேண்டும் என்பது எனது இலக்காக இருந்தது.  சமீப காலங்களிலும் கூட.  மற்ற டென்னிஸ் வீரர்கள் உள்பட பலரிடம் இருந்து வாழ்த்து செய்திகள் வந்துள்ளன.  இந்த பேராதரவுக்காக ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி 1ந்தேதி வரை ஆண்டி ரோடிக் முதல் இடத்தில் நீடித்த நிலையில், அதன்பின்பு நோவக் ஜோகோவிக், ரோஜர் பெடரர், ரபேல் நடால் மற்றும் ஆண்டி முர்ரே ஆகிய 4 பேர் மட்டுமே 18 ஆண்டுகள், 3 வாரங்கள் மற்றும் 6 நாட்கள் வரை அடுத்தடுத்து முதல் இடத்தில் நீடித்து வந்தனர்.  இந்த சாதனையை முறியடித்து முதன்முறையாக மெட்விடேவ் முதல் இடம் பிடித்து உள்ளார்.  இதுதவிர்த்து, 198 செ.மீ. உயரம் கொண்ட மெட்விடேவ், ஏ.டி.பி. தரவரிசை வரலாற்றில் முதலிடம் பிடித்த அதிக உயரம் கொண்ட டென்னிஸ் வீரர் என்ற கவுரவமும் பெற்றுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.