பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

இந்தியாவில் அரசியல் தலைவர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகள் அவ்வப்போது மர்ம நபர்களால் முடக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கும் கடந்த ஆண்டு முடக்கப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு நேற்று திடீரென மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. அவரது கணக்கை ஹேக் செய்து, ‘உக்ரைனுக்கு உதவ நன்கொடை தாருங்கள்’ என டுவிட் செய்யப்பட்டு இருந்தது.
இதைப்போல ரஷியாவுக்கு உதவுமாறும், கிரிப்டோகரன்சியிலும் நன்கொடைகள் பெறப்படும் என்றெல்லாம் அதில் பதிவுகள் போடப்பட்டு இருந்தன. இந்த முடக்கம் பற்றிய தகவல் அறிந்ததும் கம்ப்யூட்டர் அவசர நடவடிக்கைக் குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர் தற்காலிகமாக இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.
அதேநேரம் இந்த முடக்கத்துக்கான காரணம் குறித்து ஆராயுமாறு டுவிட்டர் நிறுவனத்திடமும் கேட்கப்பட்டு உள்ளதாக பா.ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரம் பா.ஜனதாவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.