தாம்பரம்- ஸ்ரீபெரும்புதூர் வரை 4 வழிச்சாலை: நெடுஞ்சாலைத்துறை முடிவு

சென்னை: முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.95 கோடி மதிப்பில் தாம்பரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர் பகுதிகளுக்கு பணி நிமித்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளை  அகலப்படுத்துவது, புதிதாக மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, தாம்பரம்-முடிச்சூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது  தொடர்கதையாகி இருந்து வந்தது. இதை தொடர்ந்து முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் வரை 3.5 கி.மீ நீளத்துக்கு நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டன. இதை தொடர்நது இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 10 கி.மீ நீள சாலைகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்படவுள்ளது. இதற்காக,முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, தாம்பரம் – முடிச்சூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள 10 முதல் 20 கிலோ மீட்டர் வரையிலான இரண்டு வழிச்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுகிறது. இந்த சாலைப் பணிகளின் போது ஒரு பெரிய பாலம் உட்பட 3 பாலங்கள் கட்டப்படுகிறது. இந்த சாலைகளை அகலப்படுத்தும் பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. வரும் மார்ச் 29ம் தேதிக்குள் டெண்டரை சமர்பிக்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தகுதியான ஒப்பந்த நிறுவனம் மூலம் அடுத்த மாதம் முதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 18 மாதங்களுக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.