மந்திரி நவாப் மாலிக் கைதை கண்டித்து மந்திரிகள் தர்ணா போராட்டம்
நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிம் மற்றும் கூட்டாளிகள் மீதான சட்டவிரோத பணபரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் இந்த வழக்கு தொடர்பாக மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக்கை நேற்று முன்தினம் 5 மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை கைது செய்தது. மந்திரி கைது செய்யப்பட்டதற்கு ஆளும் மகாவிகாஸ் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
அதே நேரத்தில் பா.ஜனதா மந்திரி நவாப் மாலிக் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இந்தநிலையில் மந்திரி நவாப் மாலிக் கைதை கண்டித்து நேற்று மராட்டிய மந்திரிகள் அரசின் தலைமை செயலகமான மந்திராலயா அருகில் உள்ள காந்தி சிலை பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி அஜித்பவாா் முதல் ஆளாக வந்தார். அதன்பிறகு போராட்டத்தில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல், சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல், வீட்டு வசதித்துறை மந்திரி ஜித்தேந்திர அவாத், உணவு பொருள் வழங்கல் துறை மந்திரி சகன்புஜ்பால், சுற்றுலா துறை இணை மந்திரி அதீதி தட்காரே உள்ளிட்டவர்களும் வந்து கலந்து கொண்டனர்.
மேலும் காங்கிரசை சேர்ந்த மந்திரிகள் பாலாசாகேப் தோரட், விஜய் வடேடிவார், அசோக் சவான், சுனில் கேதார், அஸ்லாம் சேக், சாதேஜ் பாட்டீல் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர சுப்ரியா சுலே எம்.பி, மாநில பெண்கள் ஆணைய தலைவர் ரூபாலி சாகன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிவசேனா மூத்த தலைவர்கள் யாரும் போராட்டத்துக்கு வரவில்லை. இந்தநிலையில் அதன்பிறகு மந்திரி சுபாஷ் தேசாய் போராட்டத்தில் கலந்து கொண்டார். மந்திரி ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி. ஆகியோர் தற்போது உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் போராட்டத்தின் போது காங்கிரஸ் மந்திரி பாலாசாகேப் தோரட் கூறுகையில், ” அரசியல் எதிரிகளை பேசவிடாமல் தடுக்க மத்திய விசாரணை முகமைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது துரதிருஷ்டவசமானது. நாட்டின் கருப்பு அத்தியாயம்” என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.