இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க முயற்சி: 2 ஏர் இந்திய விமானங்களை இயக்க ஒன்றிய அரசு நடவடிக்கை
டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையே நேற்று முதல் போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வரவேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு வருகை புரிந்து அங்கிருந்து விமானம் மூலம் இந்திய மாணவர்களை அழைத்து வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது பெற்றோர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. உக்ரைனில், இந்தியர்களை பொறுத்தவரை சுமார் 20,000 பேர் இருக்க வாய்ப்புள்ளது. கேரளாவை சேர்ந்த மாணவர்கள் 2,800 பேரும், கர்நாடகாவை சேர்ந்த மாணவர்கள் 1,800 பேரும், தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக 1,500 லிருந்து 3,000 பேர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு மாநிலமும் உக்ரைனில் இருக்கக்கூடியவர்களின் தகவல்களை ஒன்றிய அரசிடம் வழங்கி வருகிறது. இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களையும், இந்திய மாணவர்களையும் மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.