கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் ஊடுருவல்

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது.  ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் நேற்று தாக்க தொடங்கின.  நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
ரஷியாவுடனான முதல் நாள் போரில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.  இன்று 2வது நாளாகவும் போர் நீடிக்கிறது என கூறப்படுகிறது.  இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆற்றிய உரையில், என்னை நம்பர் ஒன் இலக்காக ரஷியா வைத்துள்ளது என்று உருக்கமுடன் பேசியுள்ளார்.
எனது குடும்பம் அவர்களது 2வது இலக்கு.  உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க அவர்கள் நினைக்கின்றனர்.  கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளது.
அதனால், நகர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  ஊரடங்கு விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்.  உக்ரைன் அரசு பணியாற்ற தேவையான அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுடன் ஒன்றாக நான் அரசு இல்லத்தில் தங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.