உக்ரைன் மீதான போருக்கு உலக நாடுகள் கண்டனம்- ஜோபைடன் அவசர ஆலோசனை

உக்ரைன் மீதான போருக்கு அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ரஷியாவுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று ஜோபைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, உக்ரைன் மீது ரஷியா நியாய மற்ற வகையில் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரால் பேரழிவு ஏற்படும்.
இந்த போருக்கு அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ரஷியாவுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் ஜோபைடன் ஜி-7 அமைப்பு நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் ரஷியா மீது ராணுவ நடவடிக்கை மற்றும் மேலும் பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், ஜோபைடன் அவசர ஆலோசனை நடத்தினார். உக்ரைன் தரப்பில் கூறும்போது, ‘தங்கள் மீது ரஷியா முழு அளவில் போரை தொடங்கி உள்ளது. ரஷியாவின் போரை நிறுத்த எங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.