தென்கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டியது

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 554 ஆக அதிகரித்தது. சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில், அந்த வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்து, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கிய நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று.

ஆனால், தற்போது அந்த நாடு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. ஒமைக்ரான் பரவலுக்கு பின்னர் அங்கு தொற்று பாதிப்பு தீவிரமடைந்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக தென்கொரியாவில் வைரஸ் பரவல் ஜெட் வேகத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அங்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. தினசரி தொற்று பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டியது. அதன்படி, நேற்று ஒரு நாளில் அங்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 29 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 181 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 554 ஆக அதிகரித்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.