உக்ரைனின் கிழக்கு, வடக்கு பகுதிகளில் வான்வழியே ஏவுகணை பொழிவு

உக்ரைன் மீது நடந்த பல மணிநேர தாக்குதலில் விமான தளங்கள் மற்றும் வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு விட்டன என ரஷ்யா தெரிவித்து உள்ளது.

உக்ரைன் மீது பல்வேறு எல்லை பகுதிகள் வழியே ஊடுருவி தாக்குதல் நடத்தப்படுகின்றன.  இதன்படி, ரஷியா, பெலாரஸ் மற்றும் கிரீமியா எல்லைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன என உக்ரைன் எல்லை படை தெரிவித்து உள்ளது.
அதிகாலை 5 மணியளவில், பெலாரஸ் ஆதரவுடன் ரஷிய படைகள், ரஷிய கூட்டமைப்பு மற்றும் பெலாரஸ் குடியரசு நாடுகளுடனான எல்லையில் அமைந்த உக்ரைன் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.  இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.  ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.
போரை முன்னிட்டு லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பு பகுதிக்கு புலம்பெயர உக்ரைன் அறிவுறுத்தி உள்ளது.  இதன்படி, தனியாக செல்ல இயலாதவர்கள் ரெயில்களை பயன்படுத்த கூறப்பட்டு உள்ளது.  அவர்களை லிசிசான்ஸ்க், ரூபிஜ்னே மற்றும் ஸ்வாடோவ் ரெயில் நிலையங்களுக்கு செல்லும்படி கூறப்பட்டுள்ளது.  மெட்ரோ சுரங்க பாதையில் உக்ரைன் மக்கள் தற்காத்து கொள்வதற்காக தஞ்சமடைந்து உள்ளனர்.
இதேபோன்று காலை 7.45 மணியளவில் உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் நகரில் வான்வழியே தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான சத்தங்கள் எழுந்துள்ளன என சி.என்.என். செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.  இன்று காலை தலைநகர் கீவ் பகுதியிலும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ளன.
உக்ரைனின் 2வது மிக பெரிய நகரான கார்கிவ் நகர மேயர், குடிமக்கள் தங்களுடைய வீடுகளிலேயே இருக்கும்படி வலியுறுத்தி உள்ளார்.  நிலைமை சீராகும் வரை பள்ளிகள் மற்றும் பிற அமைப்புகள் இன்று செயல்படாது என்றும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தொடர்ந்து உக்ரைன் மீது பல மணிநேரம் ரஷியா தாக்குதல் நடத்தி வரும் சூழலில், உக்ரைன் நாட்டின் விமான தளங்கள் மற்றும் வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு விட்டன என ரஷ்யா தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களுடன் ரஷியாவின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.