தமிழகத்தின் 38-வது மாவட்டம்..

சென்னை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்பை சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதையடுத்து அதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு தரப்பிபொதுமக்கள் கோரிக்கை மற்றும் நிர்வாக வசதியை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகவும், வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை தனி மாவட்டங்களாகவும் செயல்பட்டு வருகிறது.

புதிய மாவட்டம்!

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு தனி மாவட்டமாகவும், நெல்லையில் இருந்து தென்காசி தனிமாவட்டமாகவும் இயங்கி வருகிறது. அந்த வரிசையில் நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அது இன்று முதல் தனி மாவட்டமாக இயங்க உள்ளது.

காணொலி மூலம்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்யும் பணிகள் மற்றும் அதிகாரிகள் நியமனம் முழுமை பெற்றதை அடுத்து புதிய மாவட்டமாக மயிலாடுதுறையை இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்துகொள்கிறார்.

பல ஆண்டு கனவு

மயிலாடுதுறை தனி மாவட்டமாக செயல்பட தொடங்குவதையொட்டி அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தங்களின் பல ஆண்டு கனவு நிறைவேறவுள்ளதாகவும் இனி வரும் நாட்களில் தங்களுக்கு அலைச்சல் மிச்சம் எனவும் கூறியுள்ளனர். இதனிடையே மயிலாடுதுறைக்கு மாயவரம் என்ற பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்