துபாய் வரும் பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை!
இந்தியாவில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் துபாய் குடியிருப்பு விசா பெற்றிருந்தால் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரகத்தின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். துபாய் தவிர பிற குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள், சுற்றுலா மற்றும் இ-விசா பெற்றிருப்பவர்கள் மத்திய அடையாளம் மற்றும் குடியுரிமை ஆணையத்தின்( ஐ.சி.ஏ.வி.ன்) முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா ராசல் கைமா விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவரும் தாங்கள் விமான பயணம் செய்யும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்துகொண்ட சான்றிதழ் முடிவுகளை உடன் கொண்டு வர வேண்டும்.
இந்த பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில் 6 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்டி பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும். தற்போது இதில் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மட்டும் இந்த ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை தேவையில்லை.
இதற்கு பதிலாக பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கியதும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த பரிசோதனை முடிவுகளில் கொரோனா பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அவர்கள் துபாய் சுகாதார ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அந்தந்த நாடுகளில் உள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு பயணம் செய்வதற்கு 6 மணி நேரத்துக்கு முன்னதாக செய்யப்படும் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை ரத்துசெய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.