போலி ‘பில்’கள் வாயிலாக மோசடி; நான்காண்டு சிறை

சென்னை—போலியான பில்கள் வாயிலாக, வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பி மோசடி செய்த நபருக்கு, நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் ஹாரூன் ரஷீது, 41. இவர் 2014 பிப்ரவரி முதல் நவம்பர் வரை, பல்வேறு வங்கிகளில், பல்வேறு பெயர்களில், நடப்பு கணக்கு துவங்கி, 5.41 கோடி ரூபாய் வரை பரிமாற்றம் செய்துள்ளார்.மேலும், உரிய ரசீதுகள் பதிவு செய்யாமல், போலியான பில்கள் வாயிலாக 34.94 கோடி ரூபாய் வரை, வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஹாரூன் ரஷீது மீது, சி.பி.ஐ., வழக்கு பதிந்து, 2018ல் கைது செய்தது. வழக்கின் தன்மை கருதி அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கவில்லை.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ஏ.திருவேங்கட சீனிவாசன் முன் நடந்தது. விசாரணையில், ஹாரூண் ரஷீது மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.