உக்ரைனில் ராணுவ வீரர்கள்-பிரிவினைவாதிகள் இடையே கடும் சண்டை.!
உக்ரைனில் ராணுவ வீரர்கள் மற்றும் ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையில் ரஷியாவின் போர் பயிற்சியால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என பசாங்கு செய்து வரும் ரஷியா, பெலராஸ் நாட்டு படைகளுடன் இணைந்து தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே பெரிய அளவில் மோதல் வெடித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், தற்போது பிரிவினைவாதிகள் ராணுவத்தை திருப்பி தாக்க தொடங்கியுள்ளனர்.இதை தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. உக்ரைன் வீரர்களை குறிவைத்து பிரிவினைவாதிகள் நடத்திய பீரங்கி குண்டு தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லபட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.மோதல் நடந்து வரும் கிழக்கு உக்ரைன் பகுதியில் சனிக்கிழமை இரவு தொடங்கி நேற்று அதிகாலைக்குள் 1,000-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையில் கிழக்கு உக்ரைனில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்ற உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் 25 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் பிரிவினைவாதிகளின் பீரங்கி குண்டு தாக்குதலுக்கு உள்ளானதாகவும், இருந்தபோதிலும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் காயங்கள் இன்றி உயிர் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே கிழக்கு உக்ரைனை சேர்ந்த பிரிவினைவாத தலைவர்கள் முழு அளவில் படைகளை அணிதிரட்ட உத்தரவிட்டுள்ளதோடு, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்களை ரஷியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.