அசோகனின் 39ஆம் ஆண்டு நினைவஞ்சலி..
வில்லன்,கதாநாயகன்,குணச்சித்திர நடிகர் அசோகனின் 39ஆம் ஆண்டு நினைவஞ்சலி எஸ். ஏ. அசோகன் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். 1931.05.20 அன்று திருச்சியில் பிறந்தானவர் அசோகன். தமிழ்த் திரைப்படவுலகில் சிறந்த வில்லன் நடிகராகவும், சில படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து புகழ் கண்டவர்.
பட்டப்படிப்பு முடித்த பின்னர் இயக்குநர்
டி. ஆர். ராமண்ணாவைச் சந்தித்தார். அவர் அசோகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். ராமண்ணாவின் விருப்பப்படி, ஆன்டனி என்ற தன் பெயரை அசோகன் என திரையுலகிற்காக மாற்றிக் கொண்டார். முதன்முதலில் ஔவையார் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். 1961 ஆம் ஆண்டில் வெளியான கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னேறத் தொடங்கினார். இத் திரைப்படத்தில் ஆஷ் துரை வேடமேற்று நடித்திருந்தார். 1960 மற்றும் 1970 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்தாலும் பல குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் இவரது குரலின் தொனியும், வசனங்களை இவர் உச்சரித்த பாணியும் இவருக்கு நல்லபெயரைப் பெற்றுத்தந்தன.சிவாஜி கணேசன்,எம்ஜிஆர்,ஜெமினி கணேசன்,எஸ்.எஸ்.ராஜேந்திரன்,
முத்துராமன்,ஜெய்சங்கர்,கமல்,ரஜினி போன்ற பல தலைமுறை கலைஞர்களுடன் நடித்தவர் அசோகன். இவரது நடிப்புக்கு தீனி போட்ட படங்கள் சில:இரவும் பகலும்,உயர்ந்த மனிதன்,பாத காணிக்கை,இது சத்தியம்,கர்ணன்,கந்தன் கருணை,கப்பலோட்டிய தமிழன்,அன்பே வா,அடிமைப்பெண்,வண்டிக்காரன் மகன்,ஜக்கம்மா,வல்லவனுக்கு வல்லவன்,நீரும் நெருப்பும்,உலகம் சுற்றும் வாலிபன்,ராமன் தேடிய சீதை,எங்க பாட்டன் சொத்து, என வரிசைப்படுத்தலாம்.
எம்ஜிஆரை கதாநாயகனாக கொண்டு இவர் சொந்தமாக தயாரித்த படம் “நேற்று இன்று நாளை “.இரவும் பகலும் படத்தில் “எறந்தவன சுமந்தவனும் எறந்துட்டா…ன்
அத இருப்பினும் எண்ணிப் பாக்க மறந்துட்டா…ன் என்ற பாடலை தன் சொந்த குரலில் பாடினார் அசோகன். இவர் மகன் வின்ஸனும் ஓர் நடிகரே. நல்ல திறமையான அசோகன் பின்னாளில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அலாவுதீன் அற்புத விளக்கும்,ஆட்டுக்கார அலமேலு,தாயில்லாக் குழந்தை,துணிவே துணை,நான்,பட்டிக்காட்டு ராஜா,மூன்றெழுத்து போன்ற படங்களில் நகைச்சுவையாக நடித்தார்.ஏவியெம் நிறுவனம் எம்ஜியாரை கதாநாயகனாக கொண்டு தயாரித்த “அன்பேவா”
திரைப்படத்திலும்,உயர்ந்த மனிதனிலும் இவர் நடித்த குணச்சித்திர பாத்திரங்கள் அருமை. உயர்ந்த மனிதனில் அசோகன் நடித்த டொக்டர் வேடத்தையே முதலில் சிவாஜி கணேசன் விரும்பினார்.அன்பே வா படத்தில் எம்ஜியார் நடிக்க பெரும் காரணமாக இருந்தவர் அசோகன். “ரத்தத்தின் ரத்தமே”படப்பிடிப்பில் கலந்து கொள்ள இலங்கைக்கு வந்தார் அசோகன்.
எஸ். ஏ. அசோகன் 1982 நவம்பர் 19 அன்று தனது 52ஆவது அகவையில் மாரடைப்பால் காலமானார்.இந்திய சினிமா வரலாற்றில் அசோகன் தடம் பதித்த ஓர் அற்புத நடிகர்.
இந்த நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோம்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை