சமூக ஆர்வலர் கோரிக்கை..
தூத்துக்குடியில் நடைபாதையை ஆக்கிரமித்து, பெண்களை கேலி செய்து வரும் வடமாநில கடைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ள மனுவில்,மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு,தூத்துக்குடி மாநகராட்சிக்கு பகுதிக்குட்பட்ட பிரதான சாலையான WCG சாலை மிகவும் மக்கள் நெருக்கடிமிகுந்த சாலையாகும். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து துறைமுகம் வரை மட்டுமே குறுகலான உள்ள இந்த பிரதான சாலையின் இருபுறமும் நடைபாதை அமைந்துள்ளது .இந்த சாலையில் குறிப்பாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து அன்னை ஜுவல்லர்ஸ் பகுதியிலிருந்து குரூஸ் பர்னாந்து சிலை வரை சாலையின் நடைபாதையில், வடமாநில வியாபாரிகள் இருபுறமும் தற்காலிக துணி கடைகளால் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இந்த துணிக்கடையில் உள்ள இளைஞர்கள் அந்த பகுதியில் செல்லக்கூடிய பெண்களை அவர்கள் வியாபார உத்திகள் அழைப்பது போல் வடமாநில பாசையிலும் ஹிந்தியிலும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி அவர்களை கிண்டலும், கேலியும் செய்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க அந்த பகுதியில் நடைபாதையில் செல்லக்கூடிய பாதசாரிகள் இவர்கள் ஆக்கிரமிப்பு செய்ததினால் நடைபாதையினை விட்டு இறங்கி சாலையில் மத்தியில் செல்லக்கூடிய நிலை இருந்து வருகின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் விபத்து ஏற்படக்கூடிய சூழலும் இருந்து வருகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வழிவகை செய்யும்படி மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம் என மாவட்ட அமைப்பாளரும், வழக்கறிஞருமான சுப.மாடசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி தமிழ்மலர் மின்னிதழ் ஜோவர்
தலைமை செய்தியாளர் தூத்துக்குடி.