நீட் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை.. தமிழக அரசை சாடும் எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார்.

இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், 3வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இந்நிலையில், இன்று 3-வது முறையாக நீட் தேர்வு எழுத தனுஷ் தீவிரமாக தயாராகி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 1 மணி வரை மாணவர் தனுஷ் தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர் ஆகும் கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. காவல் துறையினர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு..

இந்நிலையில், நீட் தேர்வு பயத்தால் மாணவர் தனுஷ் மரணம் குறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

அதற்கு சரியான பதிலைக் கூறி, மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்.

மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.