இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் கூறினார். ஆனால், கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு பாதியிலேயே கைவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
கீழடியில் கண்டறியப்பட்ட சூரியன், நிலவு மற்றும் வடிவியல் குறியீடுகளைக் கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக் காசு கி.மு 4-ம் நூற்றாண்டிற்கு முன்னரே அதாவது மெளரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கு முற்பட்டது என வரலாற்று நிபுணர்கள் தெரிவிப்பதாகவும் கூறினார்.
மேலும், கொற்கை துறைமுகம் கி.மு 6-ம் நூற்றாண்டிற்கு முன்னரே வெளிநாடுகளுடனும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடனும் வணிக தொடர்பு கொண்டிருந்ததை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிவகளையில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளை, அமெரிக்க பீட்டா ஆய்வுமையத்தில் கார்பன் டேட்டிங் முறையில் சோதனை நடத்தியபோது, அவை கி.மு ஆயிரத்து 155 காலத்தைச் சேர்ந்த நெல்மணிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். எனவே பொருநை என்றழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை ஆய்வு முடிவுகள் உறுதிசெய்வதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி, இந்தியா மட்டுமின்றி கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல்துறை இனி ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி முதல்கட்டமாக சங்ககால துறைமுகமான முசிறி தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளதாகவும், கேரள மாநில தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணிகள் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
Also read: திருச்சியில் பெரியாருக்கு சிலை வைக்கக் கூடாது: ஆட்சியர் அலுவலகத்தில் அர்ஜூன் சம்பத் மனு
இதேபோன்று ஆந்திர மாநிலம் வேங்கி, கர்நாடக மாநிலம் தலைக்காடு, ஒடிசா மாநிலம் பாலூர் ஆகிய வரலாற்று சிறப்புடைய இடங்களில் தமிழக பண்பாடு குறித்த ஆய்வு பணிக்காக முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், எகிப்து, ஓமன், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியாட்நாம் நாடுகளில் அந்தந்த நாட்டின் தொல்லியல்துறையுடன் துணையோடு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகள் அடிப்படையில் நிறுவுவதே அரசின் தலையாயக் கடமை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார். தாமிபரணி கரையோர நாகரிகம் மட்டும் பொருநை அருங்காட்சியகத்தில் இடம்பெறும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஆழ்கடல் ஆய்வுகளுக்காக தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.