அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் க.பொன்முடி

தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10% கூடுதல் மாணவர் சேர்க்கையை நடப்பாண்டில் 15% ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தின் போது கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதியில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும் எனவும், அரசு உதவிப்பெறும் கல்லூரிகளிலும் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 17 பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் இருப்பதாகவும், இந்த ஆண்டு 21 கல்லூரிகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் பட்சத்தில் வரும் ஆண்டுகளில் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில் நடப்பாண்டு 25% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று பொன்முடி கூறினார்.

Must Read : அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முக்கிய நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

அதேப்போல் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் ஏற்கனவே 10% இருக்கும் கூடுதல் மாணவர் சேர்க்கையை 15% ஆக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.