விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் 3000 தொழிலாளார்களுக்கு ஏற்கனவே 5000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 5000 ரூபாய் என மொத்தம் 10 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரயில் பாஜக உறுப்பினர் நயினார் நகேந்திரன், விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திலும் அனுமதி தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.இதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிக அளவில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
கேரளா மாநிலத்தில் ஓணம் மற்றும் பக்ரித் பண்டிகைக்கு அனுமதி அளித்ததால் தான் கொரோனா தொற்று அதிகரித்ததாகவும், தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மட்டுமே அரசு கட்டுப்பாடு விதத்துள்ளதாகவும், இல்லங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கொண்டாடலாம் என்றும், இதை யாரும் தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் .
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாகவும், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலையை தயாரிக்கும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 5 ஆயிரம் நிவாரணத்தொகை என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் மொட்டை போடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோவி செழியன் மற்றும் நந்தகுமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அதில் பேசிய உறுப்பினர் நந்தகுமார், மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தின் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் உண்மையா? ஆம் எனில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தால் பக்தர்களின் உள்ளம் நெகிழ்ந்திருப்பதாக பேசினார். பொதுவாக பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கு ஐநூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாகவும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் உயிரையே காணிக்கையாக செலுத்துவது போல தாங்கள் வளர்த்த முடியை காணிக்கையாக செலுத்துவதாகவும் அவர் கூறினார்.