ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழகத்தில் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என சொல்லும் முந்தைய ஆட்சியாளர்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் 2011-16ம் ஆண்டு 82,000 விவசாய இணைப்புகளும், 2016-2021ம் ஆண்டில் 1.38 லட்சம் விவசாய மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதையும் அமைச்சர் செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டினார்.

Also Read : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் – சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பரந்தாமன் கோரிக்கை

பின்னர் மின்துறைக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில் தமிழகத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன், துரித நடவடிக்கை மூலம் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.