தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் விநியோகம்

மணப்பாறை கடைவீதி பகுதிகளில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் விநியோகம்!!

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் அரசின் நூறுநாள் சாதனைகளாக கொரோனா கால நிவாரண நிதி ரூ.4000, ஆவின்பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம், குடும்ப அட்டை தாரர்களுக்கு 14 வகையான விலையில்லா மளிகைப்பொருட்கள், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கு தனித்துறை, கொரோனா பரவலை தடுக்க மாவட்டந்தோறும் வார் ரூம் அமைப்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சாதனைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

இந்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக  வரிசையாக பட்டியலிட்டு துண்டு பிரசுரங்களாக அச்சடிக்கபட்டு பொதுமக்களுக்கு  விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி சாலை முத்தமிழறிஞர் கலைஞர் வளைவு அருகில் இருந்து, கடைவீதியில் ஒவ்வொரு கடையாக நடந்து சென்று வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கும் அரசின் நூறு நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது அமைச்சருக்கு கடை வியாபாரிகள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். அமைச்சருடன் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த மணப்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் சமது, திமுக மாவட்ட பொருளாளர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், நகர செயலாளர் கீதாமைக்கேல்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சபியுல்லா, செல்வராஜ், சின்னடைக்கன், ஒன்றிய பெருந்தலைவர்கள் அமிர்தவள்ளி, குணசீலன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி : P.பாலு (மணப்பாறை)