தலைவர் பதவிக்கு டிராவிட் மட்டுமே விண்ணப்பம்: காலக்கெடுவை நீட்டித்த பிசிசிஐ
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பித்துள்ள நிலையில், வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை. எனவே விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு இதுவரை ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்காக காலக்கெடுவை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் விதமாக கடந்த 2000ம் ஆண்டு இந்த அகாடமி உருவாக்கப்பட்டது. இந்த அகாடமியின் தற்போதைய தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார்.
இவரின் பதவிக்காலம் தற்போது முடியவுள்ள நிலையில் அப்பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தற்போது வரை ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக பிடிஐ ஊடகத்துக்கு பேட்டியளித்த பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “ தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் முன்னேற்றத்திற்காக ராகுல் டிராவிட் பல மகத்தான வேலைகளை செய்துள்ளார். எனவே, அவர் மீண்டும் பணியில் தொடர்வார் என்பதை யூகிக்க பெரிய மேதையாக இருக்க தேவையில்லை” என்று கூறியுள்ளார்