காலணி அணிய கூட நேரமில்லை – மவுனம் கலைத்த அஷ்ரப் கனி

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் உடனே வெளியேறுமாறு ஆலோசனை வழங்கினார்கள் என்றார் அஷ்ரப் கனி.

மரண தண்டனையை தவிர்க்கவே நாட்டை விட்டு வெளியேறியதாக ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். காலணி கூட அணிய நேரமில்லாத போது எப்படி அவ்வளவு பணத்தை அள்ளிச் சென்றிருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தான் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய போது ஹெலிகாப்டரில் நிறைய பணத்துடன் தப்பியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியிருந்தது. மேலும் நாட்டு மக்கள் தாலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த போது அதிபர் நாட்டைவிட்டு தப்பியோடியது விமர்சனத்திற்கு உள்ளானது. நாட்டைவிட்டு வெளியேறியது குறித்து அஷ்ரப் கனி, தனது முகநூல் பக்கம் மூலமாக வீடியோவில் தோன்றி பேசினார்.

தாலிபான்களால் ஏற்படும் ரத்தக்களறியை தவிர்க்கவே அங்கிருந்து தப்பி சென்றதாகவும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் புகலிடம் அளித்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

காபூலிலேயே இருந்திருந்தால் நிச்சயம் வன்முறை வெடித்திருக்கும் என குறிப்பிட்டுள்ள அஷ்ரப் கனி, முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லாவை போல் தூக்கிலிடப்படுவதை தவிர்க்கவே தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளார். 1996- ஆம் ஆண்டில் முகமது நஜிபுல்லா, தாலிபான்களால் சிக்னல் கம்பத்தில் தூக்கிலிடப்பட்டார்.