ஆப்கனில் தீவிரவாத குழுக்களுக்கு இடையே விரைவில் மோதல்

தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று சர்வதேச நாடுகளுக்கு தாலிபான்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ், ஜெய்ஸ்-இ-முகம்மது மற்றும் லஷ்கர் இ தோய்பா தீவிரவாதிகளும் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாத குழுக்களுக்கு இடையே விரைவில் மோதல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற மக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் காபூலுக்கு ஐஎஸ், ஜெய்ஸ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தோய்பா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள், கடந்த சில நாட்களாகவே வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாலிபான் கொடிகளை ஏந்தியபடி, வெளிநாட்டு தீவிரவாதிகள் வந்ததாகவும், இதுகுறித்த தகவல்கள் தாலிபான் அமைப்பினருக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது.