அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களில், ஒரு நாள் மட்டும் பயிற்சி வகுப்புகளை நடத்த கூட்டுறவு துறை உத்தரவு!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களில், ஒரு நாள் மட்டும் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் மாதந்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கடைகளில் பணி செய்து வரும் ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என கூட்டுறவு துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மண்டல இணைப் பதிவாளருக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும், கடை விடுமுறை நாட்களில் ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில்‌ செயல்பட்டு வரும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில்‌ இந்த வகுப்புகளை நடத்த வேண்டும்.

தவிர தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரின் செயல்முறைகளின் கீழ் பயிற்சியில் கலந்து கொள்பவர்களது பட்டியலை தயார் செய்து, அதில் எந்தவொரு நபரும் விடுபடாமல் பயிற்சியில் கலந்து கொள்வதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு பயணப்படி தொகையை கூட்டுறவு சங்க நிதியிலிருந்து வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS: S. RAWOOF