60 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட தயக்கம்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களிடம் பொது சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 80.3 சதவீத ஆண்களும், 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பது தெரியவந்துள்ளது. 19.7 சதவீத ஆண்கள் மற்றும் 18.4 சதவீத பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராம பகுதிகளில் வசிக்கும் 20.3 சதவீத பேரும், நகர பகுதிகளில் வசிக்கும் 17.5 சதவீத பேரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. 60 வயதை கடந்தவர்களில் 27.6 சதவீதம் பேரும், 45 முதல் 60 வயதுடையவர்கள் 18.2 சதவீதம் பேரும், 18 முதல் 44 வயதுடையவர்கள் 16.9 சதவீதம் பேரும் தடுப்பூசி போட தயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதை கடந்தவர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக தயக்கம் இருப்பது ஆய்வில் தெரியவந்ததையடுத்து, அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.