About us நோபல் பரிசு பெற்ற ஐ.நா.வின் உலக உணவு வழங்கும் திட்டம்! December 11, 2020December 11, 2020 AASAI MEDIA 2020ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு இன்று வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.ஐ.நா.வால் கடந்த 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, மனிதநேயச் சேவைகளைச் செய்யும் உலக உணவுத் திட்டத்துக்கு 2020ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நோபல் கமிட்டி சார்பாக ஆன்லைனில் நடக்கும் நிகழ்வில் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.பட்டினியை எதிர்த்துப் போராடியது, போர், உள்நாட்டுப் போர் நடக்கும் இடங்களில் அமைதியான சூழல் நிலவ அளித்த பங்களிப்பு, போர், பிரச்சினைக்குரிய இடங்களில் பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க 58 ஆண்டுகள் அயராத முயற்சிகள் மேற்கொண்டதால் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.உலக உணவுத் திட்டம், கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் பட்டினியால் வாடிய 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது. உலக அளவில் பட்டினியை ஒழிப்பது என்பது ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்காக கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.கரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக ஏமன், காங்கோ ஜனநாயகக் குடியரசு, நைஜீரியா, தெற்கு சூடான், புர்கினபாசோ ஆகிய நாடுகளில் பசியோடு சேர்ந்து உள்நாட்டுப் போர் வன்முறையும் சேர்ந்து கொண்டது. இந்தக் காலகட்டத்தில் கரோனாவாலும் மக்கள் பாதிக்கப்பட்டதால், ஏராளமான மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் உலக உணவுத் திட்டம் தன்னுடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, பட்டினியைப் போக்க முயன்று வருகிறது.கரோனா காரணமாக ஆண்டுதோறும் ஆடம்பரமாக நடக்கும் நோபல் பரிசளிப்பு விழா இந்த ஆண்டு எளிமையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.ரமேஷ், கொடைக்கானல் செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.