பஞ்சாப் முதல்வரின் பிரதான ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் பிரஷாந்த் கிஷோர்.

தேர்தல் செயலுத்தி ஆலோசகர் பிரஷாந்த கிஷோர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

2022 ஆம் ஆண்டில் பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது பிரஷாந்த் கிஷோர் (Prashant Kishor) ராஜினாமா செய்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

“பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபடுவதிலிருந்து தற்போது தற்காலிகமாக ஓய்வு எடுப்பதற்கான எனது முடிவை கருத்தில் கொண்டு, உங்கள் முதன்மை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பிரசாந்த் கிஷோர் அமரிந்தர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

முன்னதாக, ஏப்ரல் மாதம் தமிழகம் (Tamil Nadu), மேற்கு வங்கம் உட்பட சில மாநிலங்களில் நடந்த சட்டமன்றத்  தேர்தல்களில் பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் வியூகம் வகுத்து தேர்தல் செயலுத்திகளை அமைத்துக் கொடுத்த கட்சிகள் வெற்றி பெற்றன. எனினும், மே மாதம் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நிலையிலேயே தான் அரசியல் வியூகம் அமைக்கும் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிரஷாந்த் கிஷோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.