கோயில்களில் தமிழில் அர்ச்சனை…
அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தின் கீழ் கோயில்களில் வைக்கப்படும் அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்றதில் இருந்தே அதிரடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி கோயில் (Tamil Nadu Temples) சொத்துக்கள் அனைத்தும் இணைத்ததில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் சேகர் பாபு (P K Sekar Babu) அறிவித்திருந்தார். கோயிகளுக்கு சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. இதையடுத்து, சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதேபோல் தமிழ்நாடு முழுக்க இருக்கும் கோயில் ஆக்கிரமிப்பு ஒவ்வொன்றாக நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இதற்கு பிறகு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரிவாக்கப்படும் என்றும், பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சேகர்பாபு முன்னதாக கூறியிருந்தார். இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தின் கீழ் கோயில் அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த திட்டத்தில் முதல்கட்டமாக 47 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அன்னைத் தமிழில் அர்ச்சனை என பலகைகள் வைக்கப்படுகின்றன. இந்த திட்டம் நாளை மறுநாள் முதல் செயல் முறைக்கு வருகிறது.