தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

தமிழகத்தில் இரண்டாவது அலையில் தொற்று உச்ச அளவை எட்டி, பின் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், மீண்டும் கொரோனா  தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. 

கொரோனா 3ம் அலை (Corona Third Wave) பரவலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தும் நோக்கில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆடி மாதத்தில் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கோவில்களில் கூடுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆடி மாதத்தில், ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்க, ஆடி வெள்ளிக் கிழமை போன்ற நாட்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் நிலயில் தொற்று பரவும் அபாயம் மிகவும் அதிகரிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆடி மாத பண்டிகையில் முருகன், அம்மன் கோவில்களில் விழா எடுக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் இன்று முதல் வருகிற 3ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கொரோனா நோய் தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 9ம் தேதி வரை தளர்வுகளின்றி ஊரடங்கை நீட்டித்து உள்ளதாக கூறினார்