கோவிட் நோயாளியை சுற்றி பத்தடி தூரத்துக்கு கொரோனா வைரஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை சுற்றி பத்தடி தொலைவில் கொரோனா வைரஸ் காற்றில் கலந்திருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

  • கோவிட் நோயாளியை சுற்றி பத்தடி தூரத்துக்கு கொரோனா வைரஸ்
  • காற்றின் வேகத்தைப் பொறுத்து மேலும் வைரஸின் பரவல் அதிகாமாகக்கூடும்
  • முகக்கவசத்தை எப்போதும் அணியவும்.

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (Council for Scientific and Industrial Research) கொரோனா வைரஸ் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் மேற்கொண்ட ஆய்வுகளில் அண்மையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. அதன்படி, கொரோனா நோயாளியை (Covid Patient) சுற்றி 10 அடி தூரத்துக்கு வைரஸ் இருக்கும்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் கூறப்படுகிறது. பொது இடங்களுக்கு செல்வதை கூடியமட்டிலும் தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் முகக்கவசம் அணிவது என்பவை அறிவுறுத்தல்களில் பிரதானமானவை.

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனை தெரிவித்தார். பதிலின் சாராம்சம் இதுதான். 

”அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் CSIR கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தியது. அதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனிநபரை சுற்றிலும் 10 அடி தூரத்துக்கு வைரஸ் காற்றில் கலந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, காற்றின் வேகத்தைப் பொறுத்து, அதில் கலந்துள்ள கொரோனா வைரஸ் மேலும் அதிக தொலைவுக்கு பயணிக்கும் வாய்ப்பும் உள்ளது.எனவே, காற்று வழியாக கொரோனா தாக்கும் வாய்ப்பை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிவதை யாரும் தவிர்க்கக்கூடாது”.