விண்வெளியில் விளையாடிய Jeff Bezos-ன் வைரல் வீடியோ
இந்த வார தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விமானத்தில் விண்வெளிக்குச் சென்றார். இது உலகம் முழுதும் பேசப்பட்டது.
பல கட்ட ஆய்வுகள் மற்றும் நேர்காணல்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவுடன் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) விண்வெளிக்குச் சென்றார். அவரது சகோதரர் மார்க், நெதர்லாந்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர், ஆலிவர் டீமென் மற்றும் வாலி ஃபங்க் என்ற டெக்சாஸைச் சேர்ந்த 82 வயதான விமான நிபுணர் ஆகியோர் பெசோசுடன் சென்றனர்.
இந்த விண்வெளி பயணத்தின் (Space Travel) மூலம், டேமனும் ஃபங்கும் விண்வெளிக்கு பறந்த மிக இள வயது மற்றும் அதிக வயதுடைய நபர்களாக சாதனை படைத்தனர். இந்த பயணத்தின் துவக்கத்திலிருந்து தரையிறங்கும் வரை முழு அனுபவமும் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இதில் நான்கு நிமிடங்களில் ஜீரோ கிராவிடி, அதாவது பூஜ்ஜிய ஈர்ப்பு சக்தியுடன் இருந்தன.
பூஸ்டரிலிருந்து காப்ஸ்யூல் பிரிந்த பிறகு, விண்கலத்தில் இருந்த குழுவினர் சில நிமிடங்கள் எடை குறைந்த தன்மையை உணர்ந்தனர். காப்ஸ்யூல் பின்னர் பாராசூட்டுகளின் உதவியுடன் பூமிக்குத் திரும்பியது. ரெட்ரோ-உந்துதல் முறையைப் பயன்படுத்தி ஒரு மென்மையான தரையிறக்கம் ஏற்பட்டது.
விண்வெளியில் எடையற்ற தன்மையை அனுபவித்த நால்வரும் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான மற்றும் பிரமிக்கத்தக்க நிமிடங்களைக் கழித்ததாகத் தெரிவித்தனர்.