Tokyo Olympics: வில்வித்தை ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி 9வது இடம்

இன்றைய ஒலிம்பிகில் நடைபெற்ற வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றுகளில் இந்தியாவின் தீபிகா குமாரி 9வது இடம் பிடித்தார்.

கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் (Olympic Games 2020) ஒரு வருடம் கழித்து ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 

 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நாளான இன்று இந்தியா சார்பாக தீபிகா குமார் (Deepika Kumari), அட்டானு தாஸ் ஆகிய வில்வித்தை வீரர், வீராங்கனைகள் முதல் கட்ட போட்டிகளில் ஆடுகிறார்கள். வில்வித்தை போட்டியின் பெண்களுக்கான ரேங்கிங் சுற்றுகள் இன்று நடைபெற்றன. மொத்தம் 12 சுற்றுகள் தொடரில் நடைபெற்றது. இதில் ஒரு சுற்றுக்கு தலா 6 முறை வில்களை ஏவ வேண்டும்.

அதன்படி இந்திய வீராங்கனை உள்பட 64 பேர் கலந்து கொண்டார்கள். ஒரு சுற்றுக்கு 6 அம்பு என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர். இதில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 663 புள்ளிகள் பெற்று 9வது இடத்தை பிடித்தார்.

இந்த ரேங்கிங் சுற்றில் 616 புள்ளிகள் பெற்ற பூட்டானின் கர்மா என்ற வீராங்கனையுடன் குழு சுற்றில் தீபிகா குமாரி மோதுவார். இந்த ரேங்கிங் சுற்றில் முதல் இடத்தை கொரியாவின் ஆன் சான் பிடித்தார். இவர் 12 சுற்றுகள் முடிவில் 680 புள்ளிகள் பெற்றார். இது புதிய உலக சாதனையாகும்.