போரூர், முடிச்சூர் ஏரிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை தேவை : ஓ.பன்னீர்செல்வம்.

போரூர், முடிச்சூர் ஏரிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை நிரந்தரமாகத் தடுக்க நடவடிக்கை தேவை என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகக்கவசம், முழு உடல் கவசம், கையுறைகள், ஊசி, மருத்துவக் கழிவுகள் போன்றவை போரூர் ஏரியில்.
சட்டவிரோதமாகக் கொட்டப்படுவதாகவும், இதே நிலைமைதான் முடிச்சூர் ஏரியிலும் காணப்படுவதாகவும், புகார் அளிக்கும் போது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதனைத் தடுக்க நிரந்தரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவக் கழிவுகள் காரணமாக ஏரி நீர் மாசடைந்து, நிலத்தடி நீரும் மாசடைந்து வருவதாகவும் இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைவதாகவும், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, போரூர் ஏரி குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

ஏரிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பொருள்கள் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட
வேண்டுமென்றும், மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்து கையாள மருத்துவமனைகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க உத்தரவிட வேண்டுமென்றும் தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.M G. தமீம் அன்சாரி..