இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118ஆம் ஆண்டு ஜனன தினம்.
பாரதம் போற்றிய மகாத்தலைவர்,பிறப்பு முதல் இறப்பு வரை தன் வாழ்நாளை தேசத்திற்காகவே அர்ப்பணித்த தியாகச்செம்மல்.தமிழகத்தில்It’s true எத்தனையோ படித்த மேதைகள் வாழ்வில் ஒளியேற்றியவர் இப் படிக்காதமேதை ,கல்வி கண்களை திறந்த கண்ணப்பர் காமராஜர் அவர்கள்.1903 ஜூலை 15 ஆம் திகதி விருது நகரில் குமாரசாமி நாடார் சிவகாமியம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.இயற்பெயர் காமாட்சி(குலதெய்வத்தின் பெயர்) எனவும் ,பின் ராஜா எனவும் அழைக்கப்பட்டு பின் “காமராஜர் ” ஆனார். பள்ளிப்படிப்பை முழுமையாக தொடர முடியாமை காரணமாக மாமனாரின் துணிக்கடையில் வேலை பார்த்தார்.வே.வரதராஜன் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்ட காமராஜர் 16ம் வயதில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.1930 இல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்யாகிரகத்தில் கலந்து கொண்டு அரசுக்கெதிராக போராட்டம் நடத்தியதற்காக கொல்கத்தா அலிப்பூர் சிறையில் சிறைவாசம் விதிக்கப்பட்டு அடுத்த ஆண்டே விடுதலை செய்யப்பட்டார்,1940 இல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் இருந்தவாறே விருது நகராட்சி மன்றத் தலைவரானார்.விடுதலையான பின் நேராக நகராட்சிக்கு சென்று தனது தலைமைப் பதவியை ராஜினாமா செய்தார். பின் 1942 இல் ஒகஸ்ட் புரட்சிக்காக கைது செய்யப்பட்டு மீண்டும் மூன்று வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.அரசியலில் திரு. சத்யமூர்த்தியை தனது மானசீக குருவாகக்கொண்டவர் காமராஜர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சத்யமூர்த்தி இல்லம் சென்று தேசிய கொடியை ஏற்றினார்.1953 இல் தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு தமிழ் நாடே தனது எதிர்ப்பை தீவிரமாக தெரிவித்தது.ராஜாஜியின் அரசியல் செல்வாக்கும் சரியத் தொடங்கியது.அப்போது மொழிவாரியாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டது . மக்கள் செல்வாக்கை இழந்த ராஜாஜிக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு மேலிட்டது.நிலைமையை அறிந்த கட்சி மேலிடம் தமிழக அளவில் தீர்மானம் எடுக்க கட்சிக்கு அனுமதி வழங்கியது. ராஜாஜி பதவி விலகினார். கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பெருவாரியான வாக்குகளால் புதிய தமிழக முதல்வராக காமராஜர் 1953 இல் ஓர் தமிழ் புத்தாண்டு தினத்தில் தேர்வு செய்யப்பட்டார் .காமராஜர் தனது அமைச்சரவையில் எட்டு பேருக்கு மட்டுமே அமைச்சர் பொறுப்பு வழங்கினார். தன்னை எதிர்த்த பக்தவச்சலம், சி.சுப்ரமணியம் போன்றோரும் இதில் அடக்கம். குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்தார். சுமார் 27000 இற்கும் அதிகமான பள்ளிகளை உருவாக்கினார், மத்திய உணவுத்திட்டம் அமைத்து முழு உலகின் பாராட்டையும் பெற்றார். இதன் பலனாக அந்நேரத்தில் 7 சதவீதம் இருந்த பள்ளிப்படிப்போர் வரவு 37சதவீதமாக உயர்ந்தது.காமராஜர் ஆற்றிய அரும் பணிகள்,சென்னை இந்திய தொழில் நிறுவனம்,பவானி, மேட்டூர், காவிரி டெல்டா, அமராவதி, வைகை, சாத்தனூர், ஆரணியாறு, கிருஷ்ணகிரி, போன்ற அணைத்திட்டங்கள்.கன்னியாகுமரி மாவட்டம் தொட்டிப்பாலத்தில் நீர்த்தேக்கம், பாரத் மிகு மின் நிலையம்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிலையம், ரயில் பெட்டிகள் இணைப்பு தொழிற்சாலை,நீலகிரி புகைப்படச்சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக்கருவிகள் தொழிற்சாலை,மேட்டூர் காகிதத்தொழிற்சாலை என பல திட்டங்களை கொண்டு வந்து தமிழ் நாட்டை பசுமை பூமியாக மாற்றிய பெருமைக்குரியவர் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர். இப்படி பட்ட காமராஜரைத்தான் தனது சொந்த தொகுதியான விருது நகரில் 1967இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 1885 வாக்குகள் வித்தியாசத்தில் சீனிவாசன் என்பவர் வெற்றி கொண்டார் .இந்த அவப்பெயர் இன்றும் விருது நகருக்குண்டு.மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த காமராஜர் “கே ப்ளேன்”என ஓர் திட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி மூத்தவர்கள் இளையோர்களுக்கு வழி விடும் அடிப்படையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பொறுப்பினை பக்தவச்சலத்துக்கு வழங்கி டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரானார். காங்கிரஸில் காமராஜருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காலம். பாரதப் பிரதமர் நேரு காமராஜரின் ஆலோசனையைக் கேட்காமல் எதையும் செய்யமாட்டார் ,அந்தளவுக்கு மத்தியில் புகழ் பெற்றவராக திகழ்ந்தார் கர்மவீரர். 1964இல் நேருவின் மறைவுக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமருக்கான நாட்காலியில் அமர வைத்த பெருமை காமராஜரையே சாரும்.1966இல் சாஸ்திரி மறைந்த பின் நேருவின் மகளான இந்திராகாந்தியை பிரதமராக காமராஜர் கைகாட்டியதும் காங்கிரஸ் அதை ஏற்றுக்கொண்டது.பின் இந்திராகாந்திக்கும் காமராஜருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. அந்நேரத்தில் தமிழகத்தில் அண்ணா தலைமையிலான தி.மு.க மக்கள் மத்தியில் திராவிட கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பெரும் பலத்துடன் இருந்தது .அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பதவி ஏற்று தமிழ் நாட்டை வழி நடத்தினார். இந்நிலையில் இந்திராகாந்தி கொண்டு வந்த “எமர்ஸென்ஸி”சட்டத்தில் தன்னை எதிர்த்த இந்திய விடுதலைக்காக பாடுபட்ட ஜெயப்ரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .ஆச்சாரி கிருபாலனியும் சிறைவாசம் கொண்டார் என்ற செய்தியைக் கேள்விற்ற நிலையில் காந்தி பிறந்த நாளான ஒக்டோபர் இரண்டாம் திகதி மத்திய உணவுக்குப்பின் உறங்கச்சென்ற தமிழ்நாட்டின் “விடிவெள்ளி”தன் ஒளியை இழந்தது .ஆம்,பல லட்சம்பேர் வாழ்வில் விளக்கேற்றிய விருதுநகர் வழங்கிய விருதான காமராஜர் இம்மண்ணை விட்டு மறைந்து விண்ணுடன் இணைந்து “துருவநட்சத்திரமானார்”எத்தனை யுகங்கள் சென்றாலும் காமராஜர் போன்ற யுகபுருஷர்கள் இம்மண்ணில் தோன்றுவது அபூர்வமே, ஒவ்வொரு தமிழனின் நெஞ்சங்களில் காமராஜர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். யுகபுருஷர்களுக்கு மறைவென்பதே இல்லை.
ஆக்கம். எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை.