மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
தமிழக சட்டப்பேரவை நடைபெறும் நாள்களில் அனைத்து மின்வாரிய உயரதிகாரிகளும் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தலைமைப் பொறியாளா்கள் உள்ளிட்டோருக்கு மின்வாரிய செயலா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூன் 21) தொடங்குகிறது. அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்த தகவல்கள் அரசுக்குத் தேவைப்படலாம்.
எனவே சட்டப்பேரவை கூட்டத் தொடா் நடக்கும் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தைச் சேர்ந்த அனைத்து இயக்குநா்கள், சட்ட ஆலோசகா்கள், தலைமைப் பொறியாளா்கள், தலைமை நிதி கட்டுப்பாட்டாளா்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலா்களும், தங்கள் அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் பேரவை முடியும் வரையோ, மின்வாரியத் தலைவா் அலுவலகத்தில் இருந்து புறப்படும் வரையோ கட்டாயம் பணியில் இருக்க வேண்டும்.
இக்காலகட்டத்தில் துறை ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்வது தவிா்க்கப்பட வேண்டும்.
ஒருவேளை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் முன்னரே ஒப்புதல் பெற வேண்டும். இந்த நடைமுறைகளை மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்