குற்றால அருவியில் குளிப்பதற்கு அனுமதி கிடைக்குமா ?

தென்காசி:
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. எனவே அதில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மலைப்பகுதியில் மழை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. தற்போது சீசன் காலமாக இருப்பதால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது.

இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது.

ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மலைப்பகுதியில் மழை குறைந்ததால் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக ஆர்ப்பரித்துக் கொட்டியது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்த நிலையில் குற்றாலத்தில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

-செய்தியாளர்
செய்யது அலி.